பூரண கொழுக்கட்டை

Recipe By Lalitha Balasubramaniyan :- விநாயகருக்கு *மோதகப்பிரியன்* என்ற ஒரு பெயர் உண்டு. பிள்ளையார் சதுர்த்தி அன்று எல்லோருடைய வீட்டிலும் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்வார்கள்.

பூரண கொழுக்கட்டை

Recipe By Lalitha Balasubramaniyan

பூரண கொழுக்கட்டை:-
விநாயகருக்கு மோதகப்பிரியன் என்ற ஒரு பெயர் உண்டு. பிள்ளையார் சதுர்த்தி அன்று எல்லோருடைய வீட்டிலும் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்வார்கள்.

நான் பூரண கொழுக்கட்டை செய்யும் முறை பற்றி தெரிவிக்கிறேன். கொழுக்கட்டை மிருதுவாக வர வேண்டும் என்றால், மேல் மாவு சரியாக தயார் செய்திருக்க வேண்டும்.

மேல் மாவு தயாரிக்கும் முறை:-

  • கால் கிலோ பச்சரிசியை இரண்டு, மூன்று முறை நன்கு களைந்து விட்டு ஊற வைக்கவும்.

  • ஒரு மணி நேரம் ஊறிய பின் மிக்சியில் நைசாக தோசை மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.

  • அடி கனமான பாத்திரம் அல்லது குழிவான வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு சிட்டிகை உப்பு போட்டு கொதிக்க விடவும்.

  • அரைத்த பச்சரிசி மாவை மேலும் இரண்டு டம்ளர் நீர் விட்டு கரைத்துக் கொண்டு, கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக விட்டுக் கை விடாமல் கிளறவும்.

  • அடுப்பை மெலிதாக எரிய விட்டு அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருந்தால், மாவு நன்கு வெந்து, உருண்டு திரண்டு வரும்.

  • பின்னர் அடுப்பை அணைத்து விட்டு மூடி வைக்கவும்.

அதற்குள் பூரணத்தை தயார் செய்துகொண்டு விடலாம்.

தேங்காய்ப் பூரணம் செய்யும் முறை:-

  • தேங்காய் துருவல் – இரண்டு கப்

  • வெல்லம் பொடித்தது – ஒரு கப்

செய்முறை:
அடி கனமான வாணலியில், தேங்காய் துருவல் மற்றும் பொடித்த வெல்லம் இரண்டையும் ஒன்றாக போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

வெல்லம் கரைந்து, தேங்காயுடன் சேர்ந்து திரண்டு வரும். அப்பொழுது ஏலக்காய் பொடி சிறிதளவு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டால், கொழுக்கட்டை செய்யும் போது சுலபமாக இருக்கும்.


கொழுக்கட்டை செய்வது:-

  • தயார் செய்து வைத்த கொழுக்கட்டை மாவை, கையில் எண்ணெயைத் தொட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  • மாவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து கிண்ணம் போல் செய்து நடுவில் பூரணத்தை வைத்து மோதகமாகப் பிடிக்கவும்.

  • பின்னர் அவித்துக் கொள்ளவும்.

சிறப்பு குறிப்பு:-

மாவு கிளறும் போது ஒருமுறை, பின்னர் ஆவியில் ஒருமுறை – என இரண்டு முறை நன்கு வெந்து விடுவதால், கொழுக்கட்டை மிகவும் சாஃப்ட்டாகவும் சுவையாகவும் இருக்கும்.