பிள்ளையார் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?

“விநாயகர் பரிசுப் போட்டி” பிள்ளையார் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும் ?

பிள்ளையார் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?

“விநாயகர் பரிசுப் போட்டி”

பிள்ளையார் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்க வேண்டும் ?

யானை முகத்தோன், வினை தீர்ப்பவன் என்றெல்லாம் அழைக்கப்படும் விநாயகர், இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக வணங்கப்படுபவர். எந்த பூஜை செய்தாலும், பூர்வாங்க பூஜை விநாயகருக்கு. எந்த புதிய முயற்சி ஆரம்பித்தாலும், விநாயகர் வழிபாட்டுடனே ஆரம்பிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை விநாயக சதுர்த்தி.

பொதுவாக தெய்வங்களுக்கான விசேஷ நாட்களில், அந்தக் கடவுளின் படத்தை வைத்து பூஜை செய்வது வழக்கம். ஆனால், விநாயகர் பூஜைக்கு, அவர் படத்தை வைக்காமல், விநாயகர் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு வருடமும் புது பிள்ளையார் வாங்கி வழிபாடு செய்யப்படுகிறது. போன வருடம் வாங்கிப் பூஜித்த பிள்ளையாரை, அடுத்த வருடம் பூஜைக்கு எடுத்துக் கொள்வதில்லை.

விநாயகச் சதுர்த்தி பூஜைக்கு பிள்ளையார் வாங்கச் செல்லும் போது, ஒரு சிறிய குழப்பம் ஏற்படுவதுண்டு. அது, பிள்ளையார் தும்பிக்கை, அவரின் வலப்பக்கம் நோக்கி இருக்க வேண்டுமா அல்லது இடப்பக்கம் நோக்கி இருக்க வேண்டுமா என்பதே அந்தக் குழப்பம். உச்சிப்பிள்ளையார், மணக்குள விநாயகர் மூர்த்திகளில் தும்பிக்கை, விக்கிரகத்தின் இடது பக்கம் நோக்கியிருக்க, பிள்ளையார்பட்டி விநாயகர், மும்பை சித்தி விநாயகர் மூர்த்திகளில் தும்பிக்கை வலது பக்கம் பார்த்து இருக்கிறது. வீட்டில் வைத்து பூஜை செய்வதற்கு எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

தும்பிக்கை இடது பக்கம்:

இடது பக்கம் நோக்கி தும்பிக்கை இருப்பதற்கு வாமமுகி என்பார்கள். இது விநாயகப் பெருமானின் பொதுவாகக் காணப்படும் வடிவம். இந்த நிலை வடக்கு திசையுடன் தொடர்புடையது. சந்திரனுடைய குளிர்ச்சியான குணங்களைக் குறிக்கிறது. இது அமைதி, பேரின்பம், பொருள் செழிப்பு, குடும்ப உறவுகளுடன் நல்ல பிணைப்பு ஆகியவற்றை தர வல்லது. இந்த வகைப் பிள்ளையார், வீட்டைச் சுத்திகரிப்பதாகவும், வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் அதை சமன் செய்வதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகைப் பிள்ளையார், பார்வதி தேவி மீதான பக்தியின் அடையாளம்.

இறைவனை சாந்தப்படுத்தவும், வழிபடவும் எளிதானது. குடும்ப சூழ்நிலைக்கு உகந்தது என்பதால், வீட்டில் வைத்துச் செய்யப்படும் விநாயகர் பூஜைக்கு, தும்பிக்கை இடது பக்கம் நோக்கி இருக்கும் பிள்ளையார் சிறந்தது.

தும்பிக்கை வலது பக்கம்

இந்த வகைப் பிள்ளையார் சித்தி விநாயகர் என்று அறியப்படுகிறார். வலது பக்கம் சூரியனுக்கு உகந்தது. சூரியனின் உக்கிரம், அதே சமயம் உறுதியான மன நிலை ஆகியவற்றை அளிக்க வல்லது. பெரும்பாலும், கோவில்களில், இந்த வகைப் பிள்ளையாரைப் பார்க்கலாம். இந்தப் பிள்ளையார் வழிபாடு செல்வம், செழிப்பு, மிகுந்த சக்தியுடன் தடைகளை அகற்றுதல் ஆகியவற்றை நல்கும். மேலும், ஆன்மீக வளர்ச்சி, பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து, பேரின்பமான வீடு பேற்றை அளிக்க வல்லது. இந்தப் பிள்ளையார் வழிபாடு ஒரு மனிதன் கொண்டுள்ள பற்றை அழிக்க வல்லது என்பதால், இதனை வீட்டில் வைத்து வழிபடுவது வேண்டாம் என்று சொல்வார்கள்.

இந்தப் பிள்ளையார் வழிபாட்டு முறை கடினமானது. மிகுந்த சிரத்தையுடன், கவனத்துடன் கையாள வேண்டும். கோவில்களில் பூஜைகள் ஆகம சத்திர விதிப்படி நடப்பதால், கோவில்களில் வைக்கத் தகுந்த பிள்ளையார் வடிவம். பூஜை முறைகளில் தவறு செய்தால், எதிர் மறை விளைவுகள் ஏற்படும்.

நேரான தண்டு கொண்ட விநாயகர்

இந்த வகைப் பிள்ளையார் மிகவும் அபூர்வம்.  இடதுபக்கத் தண்டு கொண்ட பிள்ளையார் ஆற்றலில் இடது நாடி, வலது பக்கப் பிள்ளையார் பிங்கல நாடி என்றால், இந்த வகைப் பிள்ளையாரின் ஆற்றல் சுஷூம்ன நாடி அல்லது நடு நாடி. இந்த வகைப் பிள்ளையார் தனி நபருக்கும், இறைவனுக்கும் இடையிலான முழுமையான சீரமைப்பு நிலையைக் குறிக்கிறது. அங்கு எந்தப் பிரிவினையோ அல்லது சிதைவோ இல்லை. இந்த வகைப் பிள்ளையார் புனிதமானது. மிகவும் கர்ம சிரத்தையுடன், பய பக்தியுடன் வணங்க வேண்டிய பிள்ளையார்.

இதைத் தவிர தும்பிக்கை மேல் நோக்கி இருக்கும் பிள்ளையார் மற்றும் தும்பிக்கை கீழ் நோக்கி இருக்கும் பிள்ளையார் பிரதிமைகள் உள்ளன. ஆனால், இவை மிகவும் அரிதானது. இவ்வாறு வேண்டுமென்று கேட்பவர்களுக்கு பிரத்தியேகமாகச் செய்யப்படுகிற பிள்ளையார் சிலைகள்.

இறைவனுடன் தன்னுடைய ஆன்மாவின் தொடர்பை அதிகரிக்க விரும்புபவர்கள், தும்பிக்கை மேல் நோக்கி இருக்கும் பிள்ளையாரை பூஜிப்பார்கள். இந்த வகைப் பிள்ளையார், ஞானம் மற்றும் உயர்ந்த அறிவை அடைவதற்கான சின்னம். தும்பிக்கை கீழ் நோக்கி இருக்கும் பிள்ளையாரை வணங்கினால், செய்யும் செயல்களில் வெற்றி அடைவதுடன், மனதிலுள்ள ஆசைகள் நிறைவேறும்.

நாம் ஏன் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைக்கிறோம்

விநாயகர் பூஜை முடித்துப் பின் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பதுடன் முடிவடைகிறது. இதனை விசர்ஜன் என்பார்கள். இதை பூஜை முடிந்த அடுத்த நாளோ, மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது அல்லது பத்தாவது நாளோ செய்வார்கள். விநாயகச் சதுர்த்தி முடிந்த பத்தாவது நாளை அனந்த சதுர்தசி நாள் என்பார்கள்.

விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைப்பது நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. உயிர் நீத்தவனின் உடல் மண்ணுடன் கலக்கிறது அல்லது அவனது சாம்பல் நீர் நிலைகளில் கரைக்கப் படுகிறது. மறுபிறப்பின் போது அவனுக்கு வேறு உடல் வந்து சேருகிறது.

இதைப் போலவே பூஜை முடிந்தவுடன், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்ற, பிள்ளையார் பொம்மையின், மூலப் பொருளான களிமண் கரைந்து நீர் நிலையின் அடியில் தங்குகிறது. அடுத்த முறை, இந்தக் களிமண் கொத்தி எடுக்கப்பட்டு பிள்ளையார் சிலை செய்ய உபயோகிக்கப் படுகிறது.

 

கே.என்.சுவாமிநாதன், சென்னை

24-08-2025

swamikn@gmail.com

98410 94270