விநாயகப் பெருமான் கனிப்பெற்ற வரலாற்றின் நுண்பொருள்

இறைவனுடைய திருவிளையாடல்களில் ஒவ்வொன்றும் கதையாக பார்க்காமல் அதன் நுண்பொருளை உணர்ந்தால் நம் வாழ்க்கை செம்மையாகும்

விநாயகப் பெருமான் கனிப்பெற்ற வரலாற்றின் நுண்பொருள்
விநாயகப் பெருமான் கனிப்பெற்ற வரலாற்றின் நுண்பொருள்

முன்னொரு காலத்து  ஆயிரம் நரம்புகளுடைய மகதி யாழில் வல்லவராகிய நாரதமுனிவர்  தமக்கு அரிதில் கிடைத்த தேவ மாதுளங்கனியைச் சிவபெருமானது திருவடியில் வைத்து வணங்கினர். தீராத இன்பமருளும் பரம காருண்யமூர்த்தியாகிய பரமேசுவரன்  அக்கனியை ஏற்று நாரதருக்கு நல்லருள் புரிந்தனர். விநாயகக் கடவுளும்  குமாரக் கடவுளும் தந்தையை வணங்கி அக்கனியை தமக்குத் தருமாறு வேண்டினர். சிவமூர்த்தி அப்பழத்தை இரண்டாகப் பகிர்ந்து அளிக்கவில்லை. ஒரு காலத்தில் பிருதிவி முதல் நாதம் ஈறான அளவிலா உலகங்களை எல்லாம் ஒரு நாளில் சுற்றி வருகின்றவன்  எவனோ அவனே தேவர் யாரினும் பெரியவன். அவனே பரப்பிரமன் என்று தேவர் முதல் பதினெண் கணத்தவர்களும் கூடிய சபையிலே பேசித் தீர்மானித்தார்கள்.

அவ்வாறு சுற்றி வருவதற்கு அரியர பிரமாதியரும் தம்மால் ஆகாது என்று  இருந்தனர்.

         கண்ணுதற் கடவுள் தேவர்களுக்கு நேர்ந்த இந்த ஐயத்தை நீக்கத் திருவுளங்கொண்டு, சர்வலோகங்களையும் ஒரு நொடிப் பொழுதினுள் வலம் வரவும், எல்லாவற்றையும் அறியவும். படைக்கவும்  காக்கவும்  அழிக்கவும்  மறைக்கவும்  அருளவும்  வல்லவர் முழுமுதற் கடவுளாம் முருகக்கடவுள் ஒருவரே என்று தேவரும் யாவரும் தெளிந்து உய்யக் கருதி ஓர் உபாயம் செய்வாராயினர். “நீவிர் இருவரும் ஒரு கனியைக் கேட்டால்  எவ்வாறு உதவுவது. உம்மில் எவர் ஒரு கணத்துள் அகில உலகையும் வலம் வருகின்றனரோ அவருக்கே இப் பழம் உரியதாகும்” என்று திருவாய் மலர்ந்தனர்.

சிவபெருமான் இவ்வாறு சொல்லி முடியும் முன்னரே  சர்வலோக நாயகராகிய முருகப் பெருமான்  பச்சை மயில் மீது ஊர்ந்து விரைந்து சென்றார். வாயுவேகம்  மனோவேகம் என்று சொல்லப்பெற்ற வேகங்கள் அவர் போன வேகத்திற்கு அணுத் துணையேனும் ஒவ்வா. பிரபஞ்சங்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வலம் வந்து திருக்கயிலையை நோக்கினார்.

இங்ஙனம் ஆறுமுகப் பரம்பொருள் அகில உலகையும் வலம் வந்து திருக்கயிலை வந்து சேரும் முன்  மூத்தபிள்ளையார்  சிவத்திற்கு அந்நியமாய் உலகம் இல்லை என்று கொண்டு  சிவபரம்பொருளை வலம் வந்து “உலகம் எங்கினும் நிறைந்து நிற்கும் நின்மலப்பொருள் தேவரீர் தானே.

தங்களை வலம் வந்தது உலகத்தைச் சுற்றி வந்ததாகும். ஆதலால் கனியைத் தந்தருள்க” என்றனர். சிவபெருமான் மனம் மகிழ்ந்து உடனே கனியை மூத்த பிள்ளையார் கையில் தந்தார். பன்னிருகைப்  பரமசிவத்தால் “பழம் நீ” எனப் பெற்றார்.

*இவ்வரலாற்றின் நுண் பொருள்:

ஒரு கனியை இருவரும் விரும்பினால் கனியைப் பகிர்ந்து தரலாகாதோ? அகில உலகங்களையும் ஒரு கணத்தில் ஆக்கியும் அளித்தும்  நீக்கியும் ஆடல் புரிகின்ற எல்லாம் வல்ல இறைவர் மற்றொரு கனியை உண்டாக்கித் தரலாகாதோ? காரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இரு கனிகளையே வழங்கிய வள்ளல் அன்றோ அவர்! "தம்பியே கனி பெறுக" என்று தமையனாரும்  "தமையனே கனி பெறு"க என்று தம்பியாரும் ஒற்றுமையாக இருந்து இருக்கலாம். ஒரு கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடியில் வலம் வருவது முயற்சிக்குத் தக்க ஊதியமாகுமா? சகல வல்லபமும் உடைய வல்லபை கணபதிக்கு உலகை வலம் வரும் வண்மை இல்லையா? சிவத்தை வலம் வருவதே உலகை வலம் வருவதாகும் என்பது அறிவின் வடிவாய ஆறுமுகவேள் அறியாததா?

     சிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையுங் காணும் தன்மை ஒன்று. எல்லாவற்றினுள் சிவத்தைக் காணும் தன்மை மற்றொன்று.

     இதனைத் தான் ஆனைமுகன் ஆறுமுகன் என்ற இருவடிவங்களாக நின்று ஒருபரம் பொருள் நமக்கு உணர்த்தியது.

சிவ. முத்துலட்சுமணன் போச்சம்பள்ளி