வினைகள் அகற்றும் விநாயகர்
வினைகள் அகற்றும் விநாயகர் "சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வினைகள் அகற்றும் விநாயகர்
"சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்,.....
" 25 வருடங்களுக்கு முன் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து முழங்கும் சீர்காழி அவர்களின் பாடலைக் கேட்டுக் கொண்டே , நான் பணி புரிந்த வங்கியிலிருந்து வேலை முடிந்து தோழிகளுடன் புறப்பட்டேன்,. .
நேற்று நடந்தது போல இருக்கிறது. மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். நாளை விநாயகச் சதுர்த்தி; விடுமுறை பூஜைக்கான எல்லாப் பொருள்களையும் வாங்கிச் செல்ல வேண்டும்.
மாலை நேரம் ...பல்லாவரம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம். தோரணங்கள், பழங்கள் என வாங்க அலை மோதும் கூட்டம். பல வருட பழக்கம் உள்ளதால் விரைவாக நாங்கள் பூ, பழம், தேங்காய்,தோரணம் என வாங்கி பைகளை நிறைத்தோம்.
மண் பிள்ளையாரும் , எருக்கம் பூ மாலை, அருகம் புல் மட்டும் அடுத்த நாள் காலையில் வாங்குவது வழக்கம்.
நாங்கள் மூன்று பேர் , ரயில் நிலையம் செல்ல வேண்டி, வழக்கமாக நாங்கள் செல்லும் ஆட்டோவினை அழைத்து ஏறினோம். கை நிறைய பொருட்கள்.ரயில் நிலையம் வந்ததும் , ஆட்டோவிற்கு பணம் கொடுக்க கைப் பையை எடுக்க முற்பட்ட போது , காணவில்லை. ஆட்டோவில் ஏறும் போது இருந்தது.
தானே தோழிகளிடம் கூறியதும் அவர்கள் பணம் கொடுக்க முற்பட்டபோது, ஆட்டோ ஓட்டுனர் " வழியில் விழுந்திருக்கும் அம்மா" என்றார். " பிள்ளையாரை வேண்டிக்குங்க" என்றார்.
" நீங்க பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்." என்று சொல்லி அவருடைய வாடகையைக் கொடுத்தோம்.
மனதில் ஒரு நம்பிக்கை,
"காக்கும் கடவுள் கணேசனை நினை! கவலைகள் அகல அவன் அருளே துணை! யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்! அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்!"
ரயில் நிலையத்தினுள் செல்ல படிக்கட்டு அருகே செல்கையில் ஒரு குரல்,.... "அக்கா அக்கா" நாங்கள் திரும்பிப் பார்த்த போது ஒரு சிறுவன் சைக்கிளிலிருந்து இறங்கி , " இது உங்கப் பை? ஓடற ஆட்டோலேந்து விழுந்தது.நான் எடுத்து சத்தமாகக் கூப்பிட்டேன்.சைக்கிள் எடுத்து பின்னாலேயே வந்தேன்" என்றான்.
"தேங்ஸ் தம்பி " என்றதும், "உங்களை எல்லாம் தினமும் பார்க்கிறேனே " என்றான். நான் அவனுக்கு பணம் கொடுக்க முயன்ற போது வாங்காமல் மறுத்து ,"நாளைக்கு பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலையும் , அருகம் புல்லும் எங்கிட்ட வாங்கிக்குங்க"
" கண்டிப்பாக" என்று சொல்லி அவன் மூலமாக நேர்மையின் முழு அர்த்தத்தை உணர்ந்த நாங்கள் கணேசனுக்கு நன்றி சொல்லி வீட்டிற்கு சென்றோம்.
வீட்டில் காத்திருந்த என் குழந்தைகளிடம் இந்த நிகழ்வைச் சொல்லி, அடுத்த நாள் பண்டிகையின் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.
கேட்க வேண்டுமா? அடுத்த நாள் அவனிடமிருந்து நிறைய அருகம் புல்லும், எருக்கம்பூ மாலைகளும் வாங்கி வந்தேன். அருகிலேயே அவனது தந்தை மண் பிள்ளையார் செய்து விற்றுக் கொண்டிருந்தார்.
எங்கள் பூஜையை அந்த வருடம் அவரின் பிள்ளையார் வந்து ஏற்றுக் கொண்டார் . அந்தச் சிறுவனிடம் வாங்கிய மாலையைப் பிள்ளையாருக்கு அணிவித்த போது, என்னைப் பார்த்துச் சொல்வது மாதிரி இருந்தது,
"நம்பினோர் கெடுவதில்லை"
நன்றி சொல்லி வணங்கி பூஜை முடித்ததும் ஒரு நிம்மதி, சாந்தம் எனக்குள் உணர்ந்தேன்
."நம்பினோர் கெடுவதில்லை" என்பது ஒருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எந்த சூழ்நிலையிலும் கடவுளை நம்பி இருந்தால், அவர்கள் தோல்வியடைய மாட்டார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
விக்னங்களை அகற்றும் நாயகனை, விநாயகச் சதுர்த்தி அன்று வணங்கி அவன் அருள் பெறுவோம்.
சோபனா விச்வநாதன்