கவிதை

வேதப் பொருளே நாதத் துருவே  சீதக் கமலத் திருவடி போற்றி  கீதை தந்த மாயோன் மருகன் தாதை மின்னப் பந்தெரு வானே 

கவிதை

வேதப் பொருளே நாதத் துருவே 

சீதக் கமலத் திருவடி போற்றி 

கீதை தந்த மாயோன் மருகன்

தாதை மின்னப் பந்தெரு வானே 

பொன்னே பொருளே மணியே யருளே 

என்னே யிவனோர் அழியா அழகே 

மின்னப் பந்தெரு வுறையும் மறையே 

என்னப் பனிவனோர் உயர்ந்த வரையே

கோடா யுத்தால் விதியை களையும் 

வாடா வதனத் திருவே போற்றி 

கலையை தலையில் தரித்தே யமர்ந்து 

கலையா கல்வி யருளோய் போற்றி 

பாசம் தந்த மங்குசம் கொண்டு 

நாசப் படைத்தல் காத்தல் செய்வோன் 

மோதகம் கொண்டு வருமடி யாருக்கு 

போதம் தந்தருள் போதகா போற்றி

கன்னி யாவணி யத்த முதித்த 

மன்னியப் புகழுடை மன்னா போற்றி

நண்ணிய நண்பாய் என்னு லிருந்து 

எண்ணிய முடியச் செய்வோய் போற்றி

ஆதவ னாயிர மொன்றாய் சேர்ந்து 

வேதங் கைதொழும் கிளரொளி போற்றி 

பிறவி பிணியால் உழலும் என்னை 

பேறுவீ டடையச் செய்வோய் போற்றி

வறியவர் குறிப்பை அறிந்தே நல்கும் 

கீறிலா நெஞ்சத் துடையோய் போற்றி 

உறையூர் மின்னப் பந்தெரு உறையும் 

உமையாள் மதலைக் கணபதி போற்றி 

வேத வியாசன் கூறச் சொல்ல 

வேத மைந்தாம் பாரதம் தந்த 

வேலுடைக் குமரச் சோதரனே யுந்தன் 

பாதம் பணிந்தேன் ஜெய ஜெய போற்றி

மங்களம் நல்கும் எங்களின் தலைவா 

பங்கயப் பாதம் போற்றி போற்றி 

யோகக் கலையை எட்டு மளித்தே 

வேகம் கெடுக்கும் வேழோய் போற்றி 

சரியைக் கிரியை யோகம் ஞானம் 

தரிகெட் டலைவோர்க் கருள்வோய் போற்றி 

நாக மரைஞான் பந்தம் கொண்ட 

மேக வர்ணா விரைகழல் போற்றி 

மின்னப் பந்தெரு மன்னே யருளும் 

பொன்னப் பனிவன் பொற்றடி போற்றி 

நேரும் துன்பம் யாவும் களைந்தே 

பேரும் புகழும் செய்வோய் போற்றி 

எலியை பரியாய் கொண்டே விளங்கும் 

கலியுகத் திறையே கணபதி போற்றி  

பலிபா வங்களை கிள்ளி யெறிந்து 

புல்லிப் புனர்வோன் சீரடி போற்றி 

என்னில் நீயும் உன்னில் நானும் 

என்று மிருக்க அருளோய் போற்றி

சொல்லும் செயலும் ஒன்றா யிருத்தி 

சொல்லு மெழுத்து மானாய் போற்றி 

பொய்யா மனத்துள் புகுந் துறவாடும் 

மெய்யே உன்னிரு பாதம் போற்றி 

கண்ணே மணிமா ணிக்க விநாயகா 

வன்தெரு மின்னப் பந்தெரு வானே

யாரெவர் யெப்படி என்ப தறிய 

ஓரரை விழியாற் காண்போய் போற்றி 

பாரினில் யாவரு மெப்படி யென்றே 

பார்த்திடுஞ் ஞானத் திருவிழி போற்றி 

வாக்கும் மனமும் ஒடுங்கச் செய்து 

வாய்பேசா நிலை யருள்வோய் போற்றி 

மௌன மொன்றே முக்தி வழியென 

மௌனித் திருக்கும் கணபதி போற்றி

செல்லாண் டியினை இச்சையெனக் கொண்டு

எல்லோர் விருப்ப மருள்வோய் போற்றி 

மாரியை கிரியா பலமெனக் கொண்டு 

காரியம் செயல்பட வைப்போன் போற்றி 

ஞானம் ஒன்றை தனக்குள் வைத்தே

ஞானா காசத்து நடுவே நின்று 

ஞானம் நல்கி உயிர்களைக் காக்கும் 

மின்னப் பந்தெரு உறையோய் போற்றி 

ஞானம் கிரியா இச்சா மூன்றும் 

ஒன்றாய் திகழு மாணிக்க போற்றி 

எல்லா வுயிரு மின்புற் றிருக்க 

நல்லோர் தொழும் நாயகா போற்றி

கல்லா தவர்க்கு ஞானம் நல்கி 

பொல்லா தவரை பொடிப் பொடியாக்கி 

நல்வழிப் படுத்த முயலும் எந்தன் 

பல்லுயி ருள்ளே உறையோய் போற்றி 

உன்தாள் ளடியென் தலைமேல் பட்டு 

என்தலை யெழுத்தை மாற்றிய எந்தாய் 

மின்னப் பந்தெரு உறையு மருளே 

பொன்னப் பன்உன் திருவடி போற்றி

அகரம் உகரம் மகரம் சேர்ந்து 

ஓமெனும் பிரணவ மானாய் போற்றி 

பரவெளி நின்று நர்தனம் புரியும் 

சுடரொளி மங்கள ஜோதி போற்றி 

மனதி லிளமையும் உடலில் வலிமையும் 

என்று மிருந்திடச் செய்வோய் போற்றி 

உடலினி லான்மா யிருந்திட மட்டும் உன்னை நினைந்திட அருள்வோய் போற்றி 

பணமது கொடுத்து கெடுத்து என்னை 

குணமது கெடுக்கா தருள்வாய் போற்றி 

சினமது அடக்கி சக்தியை பெருக்க 

மனமது அடங்கச் செய்வோய் போற்றி 

விரிகடல் முகந்து விசும்பில் தேக்கி 

உரிய அளவினாய் பெய்வாய் போற்றி 

உயிர்க ளனைத்தும் உம்மை நினைத்தே 

உயர்வர நினையும் உறவே போற்றி 

குருவாய் வந்து அருகே அமர்ந்து 

இருமை யகல அருள்வாய் போற்றி அந்தணனே அறவோனே ஆரியனே வீரியனே 

நந்தா பெருங்கருணை வாரிதியே போற்றி 

ஆறாறு தத்துவம் கடந்து நின்று 

அருந்தூய கருணை வடிவோய் போற்றி 

பாசமெனும் மூன்றினுள் அகப்பட்ட நேசனுக்கு 

பரிந்துகை தூக்கி விடுவோய் போற்றி

பொன்னி தீரத்து தெங்கரை யமர்ந்த 

கன்னிப்பைய னெங்கள் கணபதி போற்றி 

மன்னிய மின்னப் பந்தெரு வானே 

நன்னியே வந்தருள் செய்வோய் போற்றி 

நாதம் பிந்து வொன்றாய் சேர்ந்த

சிவசக்த் யைக்ய சொரூபா போற்றி 

சிவசக்த் யைக்ய சொரூப சுழியை 

சிறப்புடன் முதலாய் கொண்டோய் போற்றி

சங்கரன் அன்று நெல்லிக் கனிக்கு 

தங்க மழையினை செய்தது போலே 

மாலவன் மார்பினில் நின்றுறை தேவியை 

மனையது வந்திடச் செய்வோய் போற்றி

திருக்குறள் இளம் புலமையர் 

கே. பி. ரோகித்கணேஷ் 

( சொற்பொழிவாளர், கட்டுரையாளர் 

145, மின்னப்பன் தெரு,

உறையூர், திருச்சி -4

செல் : 9894969558