விநாயகர் சதுர்த்தி சிறப்பு கவிதை-முதல்வனே
காட்சிக்கு எளியவன்.. கரியானை முகத்தவன்.. மாட்சிமை நிறைந்தவன் முருகனுக்கு மூத்தவன்...

விநாயகனே.. வினை தீர்ப்பவனே..!
காட்சிக்கு எளியவன்..
கரியானை முகத்தவன்..
மாட்சிமை நிறைந்தவன்
முருகனுக்கு மூத்தவன்...
மண்ணில் செய்தாலும்
மகிழ்வுடனே சிரித்திருப்பான்
மஞ்சளிலே பிடித்தாலும்
மந்தகாசம் செய்திடுவான்..!
அருகம்புல் மாலையிலே
அம்சமாய் சிரித்திடுவான்...!
எருக்கம்பூ மாலையிலும்
எடுப்பாகத் தோன்றிடுவான் ..
அவல் பொரியும், மோதகமும்
ஆவலுடன் ஏற்றிடுவான்
ஆற்றங்கரையோரங்களில்
அடியவர் காவலுக்கு வீற்றிருப்பான்..!
காகத்தின் உருவெடுத்தான் கமண்டலத்தைக் கவிழ்த்திட்டான்.-தமிழர்
தாகத்தைத் தணித்திடவே..
காவிரியை ஓடவிட்டான்...!
சிறுவனாகத் தோன்றித்தான்
வீடணன் மனம் கவர்ந்தான்..
திருமாலைக் கடல் தாண்டாது
காவிரிக்கரையினில்
இருத்திட்டான்!
ஔவைக்கு இரங்கியவள்
யௌவனத்தை மறைத்திட்டான்
மௌட்டியம்தான் அகன்றிடவே
கௌரிமைந்தன் அருளிடுவான் ...!
பக்தியுடன் நினைத்தால்
சக்தி மைந்தன் தோன்றிடுவான்..
முக்தி வேண்டினால் அதனை
சித்திக்கச் செய்திடுவான்.!