முழுமுதற் கடவுள்
விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுள் என்று மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் அழைக்கப்படுகிறார்
ஒருமுறை மகாபிரளயம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் துவாதச சூரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு உஷ்ணத்தால் தகித்தனர்.
மழை பொய்த்துப் போனது. உலகமே வறண்டு போனது. மரம், செடி, கொடிகள் எல்லாம் கருகிப்
போயின. இந்த பூமியையே தன் தலையில் தாங்கி கொண்டிருந்த ஆதிசேஷனாலேயே அந்த அனலைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது துன்புற்ற போது அதன் ஆயிரம் நாவுகளிலிருந்தும் விஷாக்கினி பிறிட்டு உலகையே அச்சுறுத்தியது.
முன்னரே வெப்பம் தாங்க மாட்டாது அல்லலுற்ற பூலோகத்து ஜீவராசிகள், இப்போது ஆதிசேஷன் உமிழ்ந்த விஷாக்கினியும் சேர்ந்துகொள்ள மேலும் வெப்பத்தில் வீழ்ந்து துயரடைந்தனர். அடியோடு அழிந்தும் போயினர்.
மேலும் வெப்பம் அதிகமாகிக்கொண்டே போகவே பன்னிரு சூரியர்களுமே பஸ்பமாயினர். அண்ட சராசரங்கள் யாவுமே அழிந்து போயின.
பஸ்பங்களிலிருந்து தோன்றிய மேகக்கூட்டங்கள் நூறு ஆண்டுகளாக மழை பொழிந்தவண்ணமேயிருந்தன. அதனால் எங்கும் நீர்ப் பிரவாகம். எல்லா லோகங்களும் அழிந்தன. இந்திரன் முதலான தேவாதி தேவர்கள் யாவரும் மறைந்தனர். மும்மூர்த்திகளோ ஒன்றாகி ஐக்கியமாயினர். எங்கும் சூனயம் நிறைந்தது.
இந்த நேரத்தில் வக்கிரதுண்டராக ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்தார். அண்ட சராசரங்களையெல் லாம் மீண்டும் உருவாக்கினார். மும்மூர்த்திகளையும் படைத்தார்.
அம் மும்மூர்த்திகள் தம்மைப் படைத்த பரம் பொருளைக் காண வேண்டும் என்று ஆவலுற்றனர். தேடியலைந்து களைத்துப் போயினர். அந்தப் பரம்பொருளை மட்டும் காணவே முடியவில்லை.
''தவம் இயற்றினால் மட்டுமே பரம்பொருளைக் காண இயலும்!" என்ற முடிவிற்கு மும்மூர்த்திகளும் வந்தனர். ஆயிரம் ஆண்டுகள் தவம் இயற்றினர்.
ஸ்ரீவிநாயகப் பெருமான் அவர்களுக்குக் காட்சி தந்தருளினார்.
அவர் தரித்திருந்த நவ இரத்தினக் கிரீடம் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமாய் ஜொலி ஜொலித்தது. இரத்தினக் குண்டலங்கள் காதுகளில் அசைந்தாடின. அதிலிருந்து வெளிப்பட்ட ஒளி முகமெங்கும் பிரகாசிக்கச் செய்தது. நெற்றியில் திலகம் மின்னியது.
நீண்ட துதிக்கையும், நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்தும், உடலெங்கும் பொன்னாலான ஆபரணங்கள் சூடியும், மார்பிலே கொன்றைமாலை தவழ, முகத்தில் கருணை பொங்க காட்சி தந்த விநாயகப் பெருமானைக் கண்டதும் மும்மூர்த்திகளும் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினர். "கணநாதனே! இன்றுதான் நாங்கள் பிறவிப் பயனை அடைந்தோம். எங்கள் படைப்பின் நோக்கம் யாது?" என்று கேட்டனர். விநாயகர் கூறினார்.
'மும்மூர்த்திகளே! பிரளயத்தால் அழிந்த எல்லா உயிரினங்களையும் நீங்கள் படைக்க வேண்டும். பிரம்மனே! ஜீவராசிகளைப் படைக்கும் ஆற்றலை உமக்குத் தருகிறேன். மகாவிஷ்ணுவே! அந்த உயிர்களையெல்லாம் காத்தருளும் சக்தியை உமக்குத் தருகிறேன். எங்கும் நிறைந்திருந்து குறிப்பிட்ட காலத்தில் யாவற்றையும் அழிக்கும் சக்தியை ருத்திரனுக்குத் தருகிறேன்.
பிரம்மன் விநாயகரைப் பணிந்து, "தேவதேவா! அனைத்துலகையும் சகல ஜீவராசிகளையும் படைக்கும்படி கூறுகிறீர்கள். நான் செய்து முடிக்கும் வழியினைத் தான் எனக்குச் சொல்லி அருளவேண்டும்" என்று கேட்டார் பிரம்மன்.
''பிரம்மனே! என் வயிற்றுக்குள் எல்லா உலகங்களும் அடக்கம். நீ உள்ளே சென்று யாவற்றையும் கண்ணுற்று சகல உலகையும் படைப்பாயாக!'' என்றவர் பிரம்ம தேவனை தன் துதிக்கையால் தூக்கி வாயில் போட்டு விழுங்கினார். ஸ்ரீவிநாயகப் பெருமானின் வயிற்றுக்குள் சென்ற பிரம்மதேவன் பல வியப்புறு காட்சிகளைக் கண்டார். சகல உலகங்களும் அங்கே காணப்பெற்றன.
அனைத்து ஜீவராசிகளும் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தன. மூன்று தொழில்களைச் செய்யும் மும்மூர்த்திகளும் அங்கே தமது பணியினை மிக ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தனர்.
கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானும், பாற்கடலில் ஆதிசேஷன் மீது ஆனந்த சயனம் கொண்டிருந்த நாராயணனும் அங்கே இருந்தனர். நான்கு வேதங்களையும் அவற்றின் பொருளோடு கண்டார். இந்திரன் உட்பட்ட தேவாதி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் போன்ற சுந்தர்வர்களும் ரம்பை ஊர்வசி திலோத்தமை போன்ற ஆடல் மங்கையரும் அங்கே உலாவக் கண்டார். சூரியர் சந்திரர் உட்பட்ட நவகிரகங்கள் நிறைந்த நட்சத்திர தேவதைகள் அஷ்ட திக்குப் பாலகர்கள் அவர்களுடன் முக்கியமான பல தேவதைகளையும் கண்டார். அசுரர்கள் அவர்களது மாயாபுரி போன்றவற்றையும் கண்டார். இவற்றையெல்லாம் கண்டு பிரம்ம தேவன் வாய் பிளந்து நின்ற வேளையில் அவர் அருகே விஷ்ணுவும் ருத்திரனும் அதே நிலையில் மெய்சிலிர்த்துப் போய் நின்றனர். விநாயகர் இப்போது அக்காட்சிகளையெல்லாம் மும்மூர்த்திகளின் பார்வையிலிருந்து அகற்றி காணாமல் போகச் செய்தார். மூவரும் வெளியேற முயற்சித்தனர். ஆனால் எந்த வழியாகச் செல்வது என்று விளங்கவில்லை.
மூவரும் வெளியேற முயற்சித்தனர். ஆனால் எந்த வழியாகச் செல்வது என்று விளங்கவில்லை.
மூவரும் சேர்ந்து விநாயகரைத் துதித்தனர். அவரும் மகிழ்ச்சியடைந்தவராக துதிக்கை வழியாகப் பிரம்ம னையும், இரு செவிகளின் வழியாக விஷ்ணுவையும், சிவபெருமானையும் வெளிவரச் செய்தரர். மூவரும் கணநாதனின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
''மும்மூர்த்திகளே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் நீங்கள் செவ்வனே செய்து, சகல உலகங்களையும் நடத்தி வாருங்கள்'' என்று ஆசீர்வதித்து விட்டு விநாயகப் பெருமான் மறைந்து போனார்.
மும்மூர்த்திகளும் வக்ரதுண்டராகிய கணநாதரை தங்கள் மனதிற்குள் இருத்தி, தத்தம் தொழில்களைத் தொடங்குவதற்கு, முழுமுதற் பொருளான விநாயகரின் அருள் பரிபூரணமாக கைகூட வேண்டுமென வேண்டி தத்தம் படைப்புகளையும், தொழில்களையும் ஆக்கும் சக்தியில் முனைப்பு காட்டத் தொடங்கினர்.
சிவ.முத்து லட்சுமணன் போச்சம்பள்ளி